கன்னியாகுமரியில் பிரபல கொள்ளையன் கைது; 66 பவுன் நகைகள் மீட்பு

கன்னியாகுமரி பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 66 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

Update: 2019-06-05 22:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில், தனிப்படை போலீசார் கன்னியாகுமரி பகுதியில் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தக்கலை அருகே முட்டைக்காடு புதுகாலனியை சேர்ந்த சிபு (வயது 29) என்பதும், குமரி மாவட்டத்தில் பல இடங்களில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.      

திருடப்பட்ட நகைகளை அடகு வைத்து ஜாலியாக செலவு செய்து வந்துள்ளான். இவன் மீது கன்னியாகுமரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 16 வழக்குகள் உள்ளன. இதையடுத்து சிபுவை போலீசார் கைது செய்து, அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் 66 பவுன் நகைகளை மீட்டனர். மேலும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கூட்டாளிகள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்