மணல் கொள்ளையை தடுத்தவர் கொலை: குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

ராமநாதபுரம் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2019-06-04 23:38 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே இளமனூர் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற மோகன் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் சிலரை தேடிவருகின்றனர். இந்தநிலையில் மணல் குவாரி உரிமையாளர் மஞ்சலோடை ஆனந்தராஜ் என்பவர் காஞ்சிபுரம் மதுராந்தகம் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:–

கொலை சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேணிக்கரை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளுக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர். மற்றொருவர் ராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளதால் கேணிக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் உறுதியாக கைது செய்யப்படுவார்கள்.

இந்த சம்பவத்தின்போது மர்ம கும்பல் விரட்டி வந்து தாக்கியதில் மோகன் காயமடைந்துள்ளார். பிரேத பரிசோதனையின்போது அவரது உடலில் தலை மற்றும் வயிறு பகுதியில் ரத்தக்காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்.

இதற்காக அவரின் உடலில் வயிற்றில் இருந்த திரவமும், சம்பவம் நடந்த கண்மாயில் இருந்த தண்ணீரும் பரிசோதனை செய்து ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன்பின்னரே அதுகுறித்து தெரியவரும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்துள்ளதால் தங்கள் மீது கவனத்தை திருப்புவதற்காக காலை, மாலை வேளைகளில் வாலிபர்கள் அதிவிரைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்வதாக புகார்கள் வந்துள்ளன. இதற்காக போலீசார் ரோந்து சுற்றி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், மண்டபம், கீழக்கரை, பரமக்குடி பகுதியில் இதுபோன்று மோட்டார் சைக்கிள்களில் அதிவிரைவாக செல்வதாக தெரியவந்துள்ளதால் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மேலும், ஒரு சில மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் தீவிர கவனம் செலுத்தி தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், திபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்