பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பை பதிவு செய்ய நடவடிக்கை; கலெக்டர் தகவல்

பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-04 23:20 GMT

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– பிளஸ்–2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே பிளஸ்–2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தங்களது 10–ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் எடுத்து வர வேண்டும்.

10–ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

வருகிற 17–ந் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் நாட்களில், மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் வேலைவாய்ப்புத் துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பிளஸ்–2 வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்