எட்டுகுடி கிராம மக்கள் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை
திருவாடானை தாலுகா எட்டுகுடி கிராம மக்கள் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டிவயல் ஊராட்சி எட்டுகுடி கிராமத்தில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் தெருவிளக்குகள் எரியவில்லை. இந்த குறைகளை போக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 50–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று காலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக அலுவலகத்திற்குள் சென்றனர்.
ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆய்வு கூடத்திற்கு சென்று விட்டதாக அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் யூனியன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய முடியப்பதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 2 நாட்களில் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கிராம பெண்கள் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் எட்டுகுடி மரியஅருள் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:– எட்டுகுடி கிராமத்திற்கு திருவாடானை தாலுகா பாண்டுகுடி நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எங்கள் கிராமத்திற்கு காவிரி குடிநீர் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரிலும் மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எங்கள் கிராம குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இதேபோல கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் எங்கள் கிராமம் நீண்டநாட்களாக இருளில் மூழ்கி கிடக்கிறது. இதுகுறித்து ஊராட்சி பணியாளர்களிடம் தெரிவித்தால், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கண்டறிந்து தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற அலுவலர்கள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.