குட்கா வினியோகஸ்தரை கத்தியால் குத்தி ரூ.25 லட்சம் கொள்ளை மர்மகும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை
சித்ரதுர்கா அருகே, குட்கா வினியோகஸ்தரை கத்தியால் குத்திவிட்டு ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மகும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
சிக்கமகளூரு,
சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் டவுன் விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் கரீம்சாப். குட்கா வினியோகஸ்தர். இந்த நிலையில் ஒசதுர்கா பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா வினியோகம் செய்ததற்கான பணத்தை வாங்கி வருவதற்காக நேற்று முன்தினம் கரீம்சாப் ஒசதுர்காவுக்கு சென்றார். அங்கு பல்வேறு கடைகளில் குட்கா வினியோகம் செய்ததற்காக ரூ.25 லட்சத்தை கடை உரிமையாளர்களிடம் இருந்து அவர் பெற்று கொண்டார்.
ரூ.25 லட்சம் கொள்ளை
இதையடுத்து அவர் பஸ்சில் ஒசதுர்காவில் இருந்து இரியூருக்கு வந்தார். பஸ் நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் கரீம்சாப் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
விஜயநகர் அருகே சென்ற போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல், ஆட்டோவை வழிமறித்தது. மேலும் கரீம்சாப்பிடம் தகராறு செய்த மர்மகும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் அவரை கத்தியால் கை, முதுகில் குத்திய மர்மகும்பல் அவர் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், கரீம்சாப்பை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மர்மகும்பலை பிடிக்க நடவடிக்கை
இதுபற்றி அறிந்த இரியூர் டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று கரீம்சாப்பிடம் விசாரித்தனர். இந்த கொள்ளை குறித்து கரீம்சாப் அளித்த புகாரின்பேரில் இரியூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்மகும்பல், கரீம்சாப்பை கத்தியால் குத்திவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் மர்மகும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பரபரப்பு
குட்கா வினியோகஸ்தரை கத்தியால் குத்திவிட்டு ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சித்ரதுர்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.