காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைகிறார்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ராஜினாமா செய்தார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைகிறார்.

Update: 2019-06-04 22:41 GMT
மும்பை,

மராட்டியகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமாக இருந்தவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல். இவரது மகன் சுஜய் விகே பாட்டீல் நாடாளுமன்ற தேர்தலில் அகமது நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் காங்கிரஸ் அந்த தொகுதியை தனது கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கியது.

இதனால் அதிருப்தி அடைந்த சுஜய் விகே பாட்டீல், பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி அவருக்கு அகமது நகர் நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கியது.

தேசியவாத காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், தன் மகனுக்கு ஆதரவாக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் செயல்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

எம்.எல்.ஏ. பதவி ராஜினமா

நாடாளுமன்ற தேர்தல் முடிவின்போது, தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் வெற்றி பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இருப்பினும் அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்து வந்தார். இந்தநிலையில், நேற்று திடீரென அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் ஹரிபாவு பாக்டேவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதேபோல காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல் சத்தாரும் ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். இவர்கள் இருவரது ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இதுகுறித்து அப்துல் சத்தார் கூறுகையில், மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விரைவில் விலகுவார்கள் என்றார்.

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன்...

இந்த நிலையில் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனதுஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காளிதாஸ் கோலம்கர் (வடலா தொகுதி), பாரத் பாலகே (சோலாப்பூர்), ஜெய்குமார் கோரே (சத்தாரா), கோபால்தாஸ் அகர்வால் (கோண்டியா), சுனில் கேதார் (நாக்பூர்), ராகுல் போந்ரே (புல்தானா) ஆகியோர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இவர்கள் அனைவரும் விரைவில் பா.ஜனதாவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தேவேந்திர பட்னாவிஸ் அரசில் மந்திரி பதவி ஏற்பார் என தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைய இருப்பது காங்கிரசுக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்