கோவில்பட்டியில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகை தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

கோவில்பட்டியில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒரு தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.

Update: 2019-06-04 21:49 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தில் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாகவும், புத்தகங்களுக்கு பணம் கேட்பதாகவும் கூறி அதனை கண்டிக்கும் வகையில், பெற்றோர் நேற்று காலையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி மாரியப்பன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மாரியப்பன், பெற்றோர் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது தனியார் பள்ளி சார்பில், மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் அனைத்து சலுகைகளும், புத்தகங்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. அரசின் கட்டாய கல்வி திட்டத்தில் சேர்ந்த மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூல் செய்யப்படுவது இல்லை.

ஆனால் அதே நேரத்தில் அரசு கொடுக்கும் புத்தகங்களை தவிர மற்ற நோட்டு, புத்தகங்களை தான் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க சொல்கிறோம் என்று தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் உடன்பாடு ஏற்பட்டதால் குழந்தைகளின் பெற்றோர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்