தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்த தனி இணையதளம்; கல்வித்துறை செயலாளர் தகவல்

புதுவையில் அரசு பள்ளிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்த தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை செயலாளர் அன்பரசு தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-04 22:30 GMT
புதுச்சேரி,

கல்வித்துறை செயலாளர் அன்பரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டமும், மாகி, ஏனாம் பகுதிகளில் அதை ஒட்டிய மாநிலங்களில் உள்ள பாடத்திட்டமும் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து பாடத்திட்டங்களிலும் பிளஸ்-2 முடிவு வெளியான பின்னர்தான் சென்டாக் மூலம் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். பொதுவாக மே மாத இறுதியில்தான் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. இதனால் இந்த ஆண்டு சென்டாக் மூலம் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகள் முன்கூட்டியே தொடங்கி நடைபெற்று வருகின்றது. வரும் ஆண்டுகளில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகும் போதே சென்டாக் சேர்க்கை பணியும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மதிப்பெண் பட்டியலை சரி பார்க்கத் தேவையில்லை. ஆனால் வருவாய்த்துறை வழங்கிய இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் தியாகிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளவர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டி உள்ளது. தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு வாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். நாளை(இன்று) பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை, மாணவர்கள் வருகை, தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ள மேலாண்மை தகவல்முறை ( MI-S-M-a-n-a-g-e-m-ent In-f-o-r-m-at-i-on Syst-em) யை விரைவில் அமல்படுத்த உள்ளோம். இந்த பணியை பள்ளி முதல்வரும், கணினி ஆசிரியரும் சேர்ந்து செய்வர். பயோ மெட்ரிக்கில் ஆசிரியர் வருகைப்பதிவு மட்டுமே தெரியும். ஆனால் இந்த முறையில் ஆசிரியர் வருகையுடன் கூடுதல் தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

அதுபோல் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்காக தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்படும். அதில் அரசுப்பள்ளிகளின் விவரமும், எந்தெந்த பள்ளிகளுக்கு என்னென்ன தேவை உள்ளது என்பதும் தெரிவிக்கப்பட்டு இருக்கும். இதனை சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவி தர விரும்பும் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் பார்த்து அறிந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்