வி.சி.க. நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி; போலீசாருடன் வாக்குவாதம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதை தடுத்து நிறுத்திய போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-04 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாண்டியன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வடக்கு புதுப்பட்டி அருகே பலத்த ரத்த காயங்களுடன் சுயநினைவு இன்றி மீட்கப்பட்டார். தற்போது தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே சந்திரபாண்டியனை மர்மநபர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியதாக அவரது மனைவி கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரபாண்டியனை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஆத்தியடிப்பட்டி கிராமமக்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்று விடுதலை சிறுத்தைகள், ஆதிதிராவிடர் அமைப்புகள் மற்றும் கிராமமக்கள் சார்பில், கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் சாலைமறியல் செய்வதற்காக ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில், போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட வந்தவர் களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குற்றவாளிகளை போலீசார் தப்பிக்க விட்டு விட்டதாக குற்றம் சாட்டி பெண்கள் கதறி அழுதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏறபட்டது.

பின்னர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் கறம்பக்குடி தாசில்தார் வில்லியம் மோசஸ், வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில், குற்றவாளிகளை கைது செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையொட்டி கறம்பக் குடியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. 

மேலும் செய்திகள்