போக்குவரத்து விதிகளை மீறும் உணவு வினியோக ஊழியர்களை கண்காணிக்க ‘வாட்ஸ்-அப் குழு’ கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு
போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் உணவு வினியோக ஊழியர்களை கண்காணிக்க ‘வாட்ஸ்-அப் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
போக்குவரத்து போலீசார் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து, சாலை விதிகளை மீறக்கூடாது என தொடர்ந்து அறிவுரை வழங்கினர். இருப்பினும், பெரும்பாலான ஊழியர்கள் சாலை விதிகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். அவ்வாறு அலட்சியமாக வாகனம் ஓட்டும் ஊழியர்களை பிடிக்க கடந்த 31-ந் தேதி போலீசார் தனிக்கவனம் செலுத்தி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 616 ஊழியர்கள் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடித்தது. நேற்று வரை 2,051 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் ‘செல்போன் செயலி’ மூலம் உணவு வினியோகிக்கும் நிறுவன மேலாளர்களுடன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் தலைமை தாங்கினார்.
‘வாட்ஸ்-அப் குழு’
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், உணவு வினியோகிக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் அடங்கிய ‘வாட்ஸ்-அப் குழு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களில் சிக்கி தண்டனைக்கு உள்ளாகும் ஊழியர்களின் புகைப்படம் குறிப்பிட்ட ‘வாட்ஸ்-அப் குழு’வில் பகிரப்படும் என்றும் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறும் ஊழியர்களை கண்காணிப்பதற்காக இந்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட இந்த தகவல்கள் போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.