சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சேதம் 7 மணி நேர மின்தடையால் பள்ளிப்பட்டு மக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.

Update: 2019-06-04 00:03 GMT
பள்ளிப்பட்டு,

 இதில் பல பகுதிகளில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்தன. 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்தன. இதன் காரணமாக மின்சாரம் தடைபட்டது.

இதனால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டனர். மாலை 4 மணி அளவில் தடைபட்ட மின்சாரம் 7 மணிநேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு வந்தது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின் ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு அவற்றை சரி செய்தனர்.

அப்போது மின்கம்பிகள் மீது விழுந்த மரக்கிளைகளை வெட்டியபோது ஜோசப் என்ற மின் ஊழியர் காயம் அடைந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று சூறைக்காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தது.

கோடை விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளி ஊழியர்கள் பள்ளிக்கு வந்தபோது மரம் முறிந்து விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த மரத்தை 5 மணிநேரம் போராடி அகற்றினர்.

மேலும் செய்திகள்