போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை; சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்

மதுரையில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-06-03 23:22 GMT
மதுரை,

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தை சேர்ந்தவர் கல்லாணை(வயது 25). இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் மதுரை பட்டாலியனில் பணியாற்றும் தனது நண்பர் சுந்தர் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த சில நாட்களாகவே கல்லாணை மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சுந்தர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கல்லாணை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கல்லாணை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கல்லாணை, நண்பர் சுந்தர் வீட்டில் தங்கி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக படித்து வந்தார். அத்தேர்வுக்காக அவர் அருகில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்தார். இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவரால் வேறு பணிக்கு செல்லமுடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மனவேதனையில் இருந்துள்ளார். அதுதான் அவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்