மகாத்மா காந்தியை விமர்சித்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி இடமாற்றம் மராட்டிய அரசு நடவடிக்கை
மகாத்மா காந்தியை விமர்சித்தும், கோட்சேயை புகழ்ந்தும் கருத்து தெரிவித்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை பணி இடமாற்றம் செய்து மராட்டிய அரசு உத்தரவிட்டது.
மும்பை,
மும்பை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரி. இவர் கடந்த மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், ‘மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் விதி விலக்கானவை. நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் உருவத்தை நீக்கும் நேரமிது.
உலகம் முழுவதும் உள்ள அவரது சிலைகள் அகற்றப்பட வேண்டும். நிறுவனங்கள் மற்றும் சாலைகளுக்கு சூட்டப்பட்டு இருக்கும் அவரது பெயர் மாற்றப்பட வேண்டும். காந்திக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும். 30.1.1948-க்காக (காந்தியடிகள் கொல்லப்பட்ட தினம்) கோட்சேவுக்கு நன்றி' என அதில் தெரிவித்து இருந்தார்.
அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.
பணி இடமாற்றம்
இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நிதி சவுத்ரியை பணி இடைநீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தின. நிதி சவுத்ரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதினார்.
காந்தியை விமர்சித்தும், கோட்சேவை புகழ்ந்தும் கருத்து வெளியிட்ட பெண் ஐ.ஏ.எஸ். நிதி சவுத்ரியை கண்டித்து நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரசார் போராட்டங்கள் நடத்தினார்கள்.
இந்தநிலையில், சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி நிதி சவுத்ரியை மராட்டிய அரசு நேற்று அதிரடியாக மந்திராலயாவில் குடிநீர் வினியோக துறைக்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
காந்தியை விமர்சித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி உள்ளது.