மின்சார ரெயிலில் மோட்டார்மேன் கேபினில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
மின்சார ரெயிலில் மோட்டார்மேன் கேபினில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
மும்பை,
மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று நள்ளிரவு 12.50 மணியளவில் பயந்தர் செல்லும் ஸ்லோ மின்சார ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலின் மோட்டார்மேன் கேபினில் ஒரு பச்சிளம் ஆண் குழந்தை இருப்பதாக ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் தாதர் ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த ரெயில் தாதர் வந்ததும், மோட்டார்மேன் கேபினில் ஏறி சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்த பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
போலீஸ் விசாரணை
அப்போது அந்த குழந்தை அயர்ந்த தூக்கத்தில் இருந்தது. குழந்தை மீட்கப்பட்ட போது தான் மோட்டார்மேனுக்கு தனது கேபினில் குழந்தை இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சயான் ஆஸ்பத்திரியில் அந்த குழந்தையை சேர்த்தனர். ரெயிலில் மோட்டார்மேன் கேபினில் பையில் வைத்து குழந்தையை போட்டு சென்ற ஆசாமியை கண்டுபிடிக்க போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் குழந்தையின் தாய் யார்? என்பதை கண்டறியவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.