3-வதும் பெண்ணாக பிறந்ததால் பெற்ற குழந்தையை கொன்ற தாய் நாசிக்கில் அதிர்ச்சி சம்பவம்

3-வது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால், பெற்ற குழந்தையை தாயே கொன்ற அதிர்ச்சி சம்பவம் நாசிக்கில் நடந்துள்ளது.;

Update: 2019-06-03 22:48 GMT
நாசிக்,

நாசிக் அத்காவ் பகுதியில் உள்ள அருண் தவான் பகுதியை சேர்ந்தவர் பாலாசாகேப் காலே. அவரது மனைவி அனுஜா.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுஜாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆனது. அப்போது மீண்டும் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை பெரிதும் எதிர்பார்த்திருந்த அனுஜாவுக்கு 3-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

கடந்த 31-ந்தேதி பாலாசாகேப் காலே வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவருக்கு போன் செய்த அனுஜா பிறந்து 10 நாட்களே ஆன தனது மகள் பேச்சு மூச்சின்றி அசைவற்று கிடப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வீட்டுக்கு விரைந்து வந்த பாலாசாகேப் காலே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

குழந்தை இறப்பில் சந்தேகம்

இருப்பினும் குழந்தையின் இறப்பில் பாலாசாகேப் காலேவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குழந்தை தலையில் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அனுஜா காலேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் 3-வதும் பெண் குழந்தையாக பிறந்த விரக்தியில் தனது குழந்தையை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அனுஜாவை கைது செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்