காதலியை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி: வேளாண் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் விரக்தி அடைந்த வேளாண் பல்கலைக் கழக மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-03 23:15 GMT

இடிகரை,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கதையனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் இளங்கோ (வயது 19). இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் 2–ம் ஆண்டு பயோ டெக்னாலஜி படித்து வந்தார். இதற்காக அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.

நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இளங்கோ பிளஸ்–2 படித்தபோது, அவருடன் படித்த மாணவியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி தங்களின் காதலை வளர்த்துக்கொண்டனர்.

தற்போது இளங்கோவின் காதலி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு சென்றபோது இளங்கோ, தனது காதலியை சந்தித்து பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றியதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் தனது காதலியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

அதற்கு இளங்கோ, திருமணத்துக்கு தேவையான தாலி, மெட்டி, துணிகள் எல்லாம் வாங்கிவிட்டேன். பணமும் சேர்த்து உள்ளேன். எனவே நாம் உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். அதற்கு அவர் எங்கள் வீட்டிற்கு வந்து பெண் கேள் என்று கூறி உள்ளார்.

உடனே இளங்கோ தனது உறவினர் ஒருவருடன் காதலியின் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரை சந்தித்து பெண் கேட்டார். அதற்கு அவர்கள் இன்னும் அவளுக்கு திருமண வயது வரவில்லை என்பதால் திருமணம் செய்து கொடுக்க மறுத்தனர். மேலும், இருவரும் படித்து முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இளங்கோ சோகத்துடன் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் விடுமுறை முடிந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு திரும்பிய இளங்கோ சக நண்பர்களுடன் சரியாக பேசவில்லை. நேற்று முன்தினம் இரவில் தனது காதலியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுடன், அவர் இளங்கோவை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இளங்கோ தனது விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின்பேரில் சாய்பாபாகாலனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்