கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி: லாக்கரை திறக்க முடியாததால் தப்பிய 300 பவுன் நகைகள்

கூட்டுறவு கடன் சங்கத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். லாக்கரை திறக்க முடியாததால் 300 பவுன் நகைகள் தப்பின.

Update: 2019-06-03 22:45 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மானூர், அண்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பணம் சேமித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன்களை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்க பணியாளர் தண்டபாணி, அலுவலகத்தை திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்க செயலாளர் மயில்சாமிக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, கீரனூர் சப்–இன்ஸ்பெக்டர் முகமது அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, சங்க அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள கம்பிவேலி உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பூட்டை உடைத்து சங்க அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது.

சங்க அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 நபர்கள் பூட்டை உடைத்து சங்க அலுவலகத்துக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவர்கள் பணம், நகை உள்ள லாக்கரை உடைக்க முயற்சிப்பதும், அதனை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இதற்கிடையே திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சங்க செயலாளர் கூறுகையில், லாக்கரை திறக்க முடியாததால், அதில் வைக்கப்பட்டிருந்த 300 பவுன் நகைகள் தப்பின என்றார்.

மானூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்ற கிராம மக்கள் அங்கு திரண்டனர். தங்களது நகைகள் திருட்டு போய் விட்டதோ? என்ற பதற்றத்துடன் அவர்கள் காணப்பட்டனர். ஆனால் கொள்ளை முயற்சி மட்டுமே நடந்தது என்பதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தினால் மானூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்