வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சம் கையாடல்; செயலாளர் கைது

வடமதுரை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சம் கையாடல் செய்ததாக சங்க செயலாளர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-03 23:45 GMT

திண்டுக்கல்,

பழனி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் இளமதி, திண்டுக்கல் வணிகவியல் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே உள்ள மணியக்காரன்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் வரவு–செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் சிலர் தங்களின் நகைகளை சங்கத்தில் அடமானம் வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றுள்ளனர். பின்னர் அந்த தொகையை செலுத்திவிட்டு நகையையும் மீட்டுள்ளனர்.

ஆனால் நகைகளை திரும்ப ஒப்படைத்ததாக மட்டும் சங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகைக்கான கடன் தொகையை பெற்றது குறித்து எந்த ஆவணங்களிலும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சங்க செயலாளர் முருகன், எழுத்தர் வாசுகி மற்றும் நகை மதிப்பீட்டாளர் மகாலட்சுமி ஆகியோர் உதவியுடன் அந்த தொகையை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் வணிகவியல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சங்க செயலாளர் முருகன், ஊழியர்கள் உதவியுடன் அந்த பணத்தை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வடமதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சேகர்பவுல்ராஜ், தண்டபாணி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் வடமதுரைக்கு விரைந்து சென்று முருகனை கைது செய்தனர்.

பின்னர் வாசுகி, மகாலட்சுமியை கைது செய்ய சென்ற போது, அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான முருகன் மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்