மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரிகள்: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் வறண்டன அதிக தண்ணீரை சேமிக்க தூர்வாரும் பணி தீவிரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் வறண்டு உள்ளன. இதனால் ஏரிகள் மேய்ச்சல் நிலமாக மாறின.

Update: 2019-06-03 23:00 GMT
சென்னை,

சென்னையில் ஆண்டுதோறும் குடிநீரின் தேவை அதிகரித்து வருவது ஒரு புறமும், மற்றொரு புறம் பருவமழை பொய்த்து போவதும் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வாக இருக்கிறது. இதனால் சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நெருக்கடியை சென்னை குடிநீர் வாரியம் எதிர்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுமே வறண்டு போய் உள்ளன.

குறிப்பாக பூண்டி ஏரியில் 69 மில்லியன் கன அடியும், புழல் 4 மி.க.அடியும், சோழவரம் 2 மி.க.அடியும், செம்பரம்பாக்கம் 1 மி.க.அடி என மொத்தம் 76 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் வெறும் 76 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இவை பரந்து விரிந்து உள்ள ஏரியின் ஒரு பகுதியில் தேங்கி கிடக்கிறது. ஏரியின் பெரும்பாலான பகுதிகள் வறண்டே கிடக்கிறது.

ஏரிகள் தூர்வாரும் பணி

தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலை ஒரு புறம் இருக்கும் நிலையில், வறண்டு கிடக்கும் ஏரியை அடுத்த மழைக்கு முன்பாக தேக்கி வைக்கும் தண்ணீரின் அளவை அதிகரிப்பதற்காகவும், ஏரிகள் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீரின் அளவை அதிகரிப்பதற்காகவும் ஏரிகளை தூர்வார வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் ஏரிகள் தூர்வாருவது மற்றும் ஏரிகளில் உள்ள மதகுகளை சீரமைப்பது, கரைகளை பலப்படுத்துவது, சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கி உள்ளது.

அந்தவகையில் புழல் ஏரியில் உள்ள மதகுகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதேபோல் இந்த ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தொடர்ந்து ஏரியில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

சோழவரம் ஏரியில் சாலைகள்

சோழவரம் ஏரியின் உள்பகுதியில் தூர்வாரப்படும் மணல்கள் ராட்சத லாரிகள் மூலம் அப்புறப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதன் மூலம் கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அதன் மேல் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பூண்டி ஏரியில் மதகு பகுதியில் 17 அடி தண்ணீர் உள்ளது. இதில் 20 கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே முறையாக தண்ணீர் வினியோகத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும். தற்போது 17 அடி மட்டும் இருப்பதால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் பணி நடந்து வருகிறது.

கிருஷ்ணா நதி நீர்

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மழை பொய்த்து போனதால் ஒப்பந்த அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குறிப்பாக நடப்பாண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி.க்கு பதில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் ஆந்திர மாநிலத்தில் 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. பொதுவாக 7 டி.எம்.சி. தண்ணீருக்கு மேல் இருந்தால் மட்டுமே இந்த அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது அங்கும் பருவமழை பொய்த்து போனதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது. இதனாலும் பூண்டி ஏரி வறண்டு உள்ளது. இந்த ஏரி தூர்வாருவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தூர்வாரும் பணி நடக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் ஓரிரு நாட்களில் தூர்வாருவது மற்றும் பராமரிப்பு பணிகள் தொடங்கவிருக்கிறது.

மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரிகள்

பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் தண்ணீர் வறண்டு கிடக்கும் பகுதிகளில் பச்சை பசேல் என்று புற்கள் வளர்ந்து உள்ளன. கால்நடைகள் ஏரிகளில் உள்ள புற்களை மேய்ந்து வருகிறது. இதனால் ஏரிகள் மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது.

பூண்டி ஏரியின் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. தற்போது போரூரை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் உள்ள 1.5 டி.எம்.சி. தண்ணீர் கடந்த ஒரு மாதமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அங்கும் தண்ணீர் குறைந்துவிட்டது. எனவே ஒரு சில நாட்களுக்கு மட்டுமே அங்கு தண்ணீர் எடுக்க முடியும். இதற்கு மாற்று ஏற்பாடாக செம்பரம்பாக்கம் ஏரியின் அருகில் உள்ள எருமையூரில் உள்ள கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக ராட்சத அளவிலான குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புழல் ஏரியை தூர்வாரும் பணி ரூ.173.51 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.

மேற்கண்ட தகவல்களை பொதுபணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்