‘தனியாரை விட தரமான கல்வி’ “அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் முன்வாருங்கள்” சைதை துரைசாமி அழைப்பு
“தனியாரை விட தரமான கல்வி கிடைப்பதால் அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டும்” என்று சைதை துரைசாமி கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்று நோட்டு புத்தகங்களை வழங்கினார். மேலும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பேசியதாவது:-
சைதை துரைசாமி அழைப்பு
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் பல சலுகைகளும், தரமான கல்வியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அறியாமை காரணமாக அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குகிறார்கள். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்றால் முன்னாள் மாணவர்கள் முன்வந்து, ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளியின் தரம் குறித்து வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கவேண்டும்.
பெரிய மனிதர்களிடம் சென்று நிதி திரட்டவேண்டும். அந்த பெரும் நிதியை வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்து, அதில் இருந்து கிடைக்கக்கூடிய வட்டித்தொகையை மாணவர்களின் பன்முகத்திறமையை மேம்படுத்த பயன்படுத்துங்கள். அந்தவகையில் இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு நான் ரூ.1 லட்சம் தர தயாராக இருக்கிறேன். எனவே அரசு பள்ளிகளை தரம் உயர்த்தவேண்டிய பெரும் கடமை முன்னாள் மாணவர்களுக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.