பார் உரிமையாளர் தற்கொலையால் பணியிடமாற்றம்: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் மாமல்லபுரத்திற்கே மாற்றம்

பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீண்டும் மாமல்லபுரத்திற்கே மாற்றப்பட்டார்.

Update: 2019-06-03 22:15 GMT
சென்னை,

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் நெல்லையப்பன் (வயது 37). காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் அ.தி.மு.க. பிரமுகர்களின் டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பார் நடத்துவதற்காக அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் பல கோடி ரூபாயை அபகரித்து கொண்டதாகவும், போலீசார் மாமூல் கேட்பதாகவும் குற்றம்சாட்டி கடந்த வாரம் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

பணியிட மாற்றம்

இறப்பதற்கு முன் தனது முகநூல் பதிவில், தனது தற்கொலைக்கு அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன், மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தான் காரணம் என்று கூறி வீடியோ பதிவிட்டு இருந்தார். மேலும் மரண வாக்குமூலமும் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. சுப்புராஜ், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.

மாமல்லபுரத்திற்கே மாற்றம்

மேலும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் காஞ்சீபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு காஞ்சீபுரம் ஆயுதப்படைக்கும் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் பார் ஊழியர் தற்கொலை வழக்கில் இந்த இருவர் மீதும் எந்தவித தொடர்பும் இல்லாத காரணத்தால் இருவரும் மாமல்லபுரத்திற்கே மீண்டும் மாற்றப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்