கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை வேண்டும் கலெக்டரிடம் மனு

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2019-06-03 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து இருந்தவர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய கலெக்டர், அவற்றின்மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

வாகன கட்டணம்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகன கட்டணங்கள் எந்தவித விதிமுறையும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.25 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. இது பெரும் கட்டணக் கொள்ளையாகும். ஆனால் ரூ.25-க்கு மட்டுமே ரசீது வழங்கப்படுகிறது. நாகர்கோவில் ரெயில்வே சந்திப்பில் ரெயிலில் பயணிக்கும் பயணிகள் தங்களது வாகனங்களை கட்டாயம் நிறுத்தியாக வேண்டும். அதனால் இந்த வாகன கட்டணத்தை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன கட்டணம் எதுவானாலும் முறைப்படி தகவல் பலகை வைத்திட வேண்டும்.

குமரி மாவட்ட கலெக்டர், ரெயில்வே சந்திப்பில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களைத்திரட்டி எங்களது கட்சி சார்பில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

வட்டக்கோட்டை

இதேபோல் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் வட்டக்கோட்டையும் ஒன்று. வட்டக்கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மக்களை கஷ்டப்படுத்தும் விதமாக நுழைவு கட்டணமாக ரூ.25 வசூலிப்பது கொடுமையானது. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து ரூ.10 கட்டணமாக தொல்லியல்துறை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் மனு

இதேபோல் நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின் தலைமையில் குறும்பனையில் உள்ள குமரி மாவட்ட கட்டுமரம் மற்றும் வள்ளம் யூனியன் தலைவர் செலஸ்டின், செயலாளர் தாசன், பொருளாளர் வால்டர், ஜாண்சன் மற்றும் மீனவர்கள் நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களாகிய நாங்கள் நாட்டுப்படகுகளில் வெளிப்பொருத்தும் எந்திரங்களை பயன்படுத்தி தொழில் செய்து வருகிறோம். வெளிப்பொருத்தும் எந்திரங்களுக்கு எரிபொருளான மண்எண்ணெய்யை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக வைத்த கோரிக்கையை அரசு ஏற்று மீன்வளத்துறை மூலம் மாதம் 300 லிட்டர் மண்எண்ணெய்யை ரூ.25 மானிய விலையில் வழங்கி வருகிறது.

மறுபரிசீலனை

அரசு மானிய விலையில் வழங்கும் மண்எண்ணெய்யை அந்தந்த மண்எண்ணெய் வழங்கும் மையத்தில் லிட்டருக்கு ரூ.25 கொடுத்து பெற்று வருகிறோம். ஆனால் தற்போது அந்த மண்எண்ணெய்க்கான மானியத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாகக் கூறி எங்களிடம் கட்டாயமாக வங்கி கணக்கை கேட்கிறார்கள்.

இதனால் நாளடைவில் மானியத்தை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம். எனவே அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து ஏற்கனவே வழங்கப்பட்டு வருவதுபோல் மானிய விலை மண்எண்ணெய் வழங்க வேண்டும். மண்எண்ணெய் மானியத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை

ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் சுசீலா தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் ‘தேசிய நெடுஞ்சாலைகள் பல மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. எனவே இந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்