கர்நாடகத்தில் புதியதாக 3,800 கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் உயர்கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா தகவல்

கர்நாடகத்தில் புதியதாக 3,800 கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாநில உயர்கல்வித் துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

Update: 2019-06-03 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள கர்நாடக சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான கல்வெட்டை கவர்னர் வஜூபாய்வாலா திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாநில உயர்கல்வித் துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா, துணை வேந்தர் பத்மசேகர் மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் வஜூபாய் வாலா பேசியதாவது:-

தலைமை பண்பு

மாண்புகள் நிறைந்த, தலைமை பண்பை உருவாக்கும் வகையிலான கல்வியை போதிக்க வேண்டியது அவசியம். ஆங்கிலத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம், நமது கலாசார மொழிக்கு கிடைப்பது இல்லை.

குழந்தைகளிடம் கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும். இந்த கலாசார பல்கலைக்கழகத்தில் இலவச கல்வியை வழங்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். கர்நாடகத்தில் சுகாதாரம் மற்றும் கல்விக்கு நல்ல ஊக்கம் கிடைக்கிறது.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

பணியாளர்கள் நியமனம்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மந்திரி ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கல்லூரிகளில் 996 முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றில் 50 சதவீத பணியிடங்கள் நடப்பு ஆண்டு நிரப்பப்படும். பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படுவதுடன், காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்குவது குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு செய்யப்படும். 2020-ம் ஆண்டுக்குள் ஆன்லைனில் தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும். உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. தொழில் சார்ந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

விரிவுரையாளர்கள் நியமனம்

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் 5 கிராமங்களை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் புதியதாக 3,800 கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கு அனுமதி வழங்குமாறு நிதித்துறையிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு ஜி.டி.தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்