கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் முதன்மை கல்வி அதிகாரி தகவல்

கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படும் என்று சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணே‌‌ஷ்மூர்த்தி கூறினார்.

Update: 2019-06-03 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணே‌‌ஷ்மூர்த்தி கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் சேலம் நகரம், சேலம் ஊரகம், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 5 கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 21 வட்டாரத்தில் 155 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 134 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன.

அதே போன்று 24 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளும், 12 உயர்நிலைப ்பள்ளிகளும் உள்ளன. இதே போன்று மாநகராட்சி, நகராட்சி, தனியார், மெட்ரிக் பள்ளி என மொத்தம் 2 ஆயிரத்து 473 பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமார் 5½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 733 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி-க்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஆங்கில வழியில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் 153 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் இது வரை எல்.கே.ஜி. வகுப்புக்கு 524-ம், யு.கே.ஜி. வகுப்புக்கு 662-ம் என மொத்தம் 1,186 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்.

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் அவர்கள் பள்ளிக்கு வருவதை கண்காணிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏற்கனவே பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு தங்கள் வருகையை உறுதி செய்யும் வகையில், பயோ மெட்ரிக் கருவியில் விரல் ரேகை பதிவு செய்தனர். ஒரு சில பள்ளிகளில் அதிக ஆசிரியர்கள் பணியில் உள்ளதால், அவர்கள் வரிசையில் நின்று தங்கள் வருகையை பயோ மெட்ரிக் கருவியில் பதிவு செய்தனர்.இதே போன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்