கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Update: 2019-06-03 22:45 GMT
நெல்லை,

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சுமார் 1½ மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையொட்டி பெரும்பாலான மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கோடை விடுமுறையை கழிக்க, உறவினர்களின் வீடுகள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து நேற்று பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. 2019-2020-ம் கல்வி ஆண்டுக்கான பாட வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த பெரும்பாலான மாணவ-மாணவிகள் ஏற்கனவே படித்த வகுப்பில் இருந்து ஒரு வகுப்பு உயர்த்தப்பட்டனர். மேலும் புதிய வகுப்புக்கு வந்தவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, வகுப்புகளை தொடங்கினர்.

ஒரு சில இடங்களில் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல மறுத்து அழுது, அடம் பிடித்தனர். அவர்களை பெற்றோர் தூக்கி வந்து சமாதானப்படுத்தி, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர். குறிப்பாக எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு குழந்தைகள் பெரும்பாலானோர் பெற்றோரை விட்டு பிரிய முடியாமல் கதறி அழுதனர். அவர்களுக்கு சாக்லேட், விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து, பெற்றோர் சமாதானப்படுத்தி, பள்ளியில் சேர்த்தனர்.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், ஏற்கனவே பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அந்த புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். அவற்றை மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டு படிப்பை தொடங்கினர். இதேபோல் சுயநிதி பள்ளிகளில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு ஒரு சில பாடப்பிரிவுகளில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு விரைவில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் புதிய சீருடைகள் வழங்கப்பட்டன.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளும் நேற்று தங்களது பெற்றோருடன் பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தேவையான தகர பெட்டிகள், சூட்கேஸ், பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தனர். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை முன்னிட்டு, காலையில் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஒருசில பள்ளிகள் மற்றும் மழலை பள்ளிக்கூடங்கள் வருகிற 6, 7-ந்தேதிகளில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கல்வி ஆண்டில் இருந்து மாநகராட்சி, பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக 30 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் 60 மாணவர்கள் வரையிலும் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜவஹர் உயர்நிலைப்பள்ளி அருகில் அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. தற்போது அங்கு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. கல்லணை பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு பெரும்பாலான பள்ளிகளில் நேற்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ-மாணவிகளின் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்