வரதட்சணை வாங்கி வர மறுத்த காதல் மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி வியாபாரிக்கு வலைவீச்சு

வரதட்சணை வாங்கி வர மறுத்த காதல் மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற வியாபாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-06-03 21:30 GMT
ஹாசன்,

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா என்.டி.கெரே பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். வியாபாரி. இவரும் அப்பகுதியை சேர்ந்த பிரகுர்தி என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெற்றோர் வீட்டிற்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி தேவராஜ், பிரகுர்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் வரதட்சணை வாங்கி வர மறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

எரித்து கொல்ல முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் வரதட்சணை வாங்கி வர மறுத்தது தொடர்பாக தேவராஜ், பிரகுர்தி இடையே தகராறு உண்டானது. அப்போது ஆத்திரம் அடைந்த தேவராஜ், பிரகுர்தியின் உடலின் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

தனது உடலில் தீ பிடித்து எரிந்ததால் பிரகுர்தி அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து பிரகுர்தி உடலில் மீது பிடித்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனாலும் பிரகுர்திக்கு தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த நிலையில் தன்னை உயிருடன் எரித்து கொல்ல முயன்றதாக தேவராஜ் மீது பிரகுர்தி ஒலேநரசிப்புரா புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தேவராஜை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்