ஹாசன் டவுனில் பள்ளி மாணவிகள் விடுதியில் புகுந்த மர்மநபரால் பரபரப்பு

ஹாசன் டவுனில், பள்ளி மாணவிகள் விடுதியில் புகுந்த மர்மநபரால் பரபரப்பு உண்டானது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அந்த மர்மநபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Update: 2019-06-03 19:55 GMT
ஹாசன்,

ஹாசன் டவுன் பகுதியில் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அந்த மாணவிகள் பள்ளிக்கு சொந்தமான விடுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் விடுதியின் தடுப்புசுவரில் ஏறி ஒரு மர்மநபர் விடுதிக்குள் குதித்து உள்ளார். பின்னர் விடுதிக்குள் உள்ள ஒரு கோபுரத்தின் மீது ஏறிய மர்மநபர், கோபுரத்தின் மேலே சென்று அங்கிருந்து விடுதியின் மாடிக்குள் குதித்து உள்ளார்.

பின்னர் அந்த மர்மநபர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையின் அருகே சென்று நின்று கொண்டு இருந்து உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி கழிவறைக்கு சென்று உள்ளார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான...

அவர் கழிவறையின் அருகே மர்மநபர் நிற்பதை பார்த்ததும் அந்த மாணவி கூச்சலிட்டார். இந்த கூச்சல் சத்தம் கேட்டு சக மாணவிகள் எழுந்து வந்தனர். இதனால் அந்த மர்மநபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மேலும் சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அந்த விடுதியில் பரபரப்பு உண்டானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் சுவர் ஏறி உள்ளே புகுந்துவிடும் காட்சியும், அவர் தப்பி செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. ஆனால் அவரது முகம் தெளிவாக இல்லை. இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்