மாவட்டத்தில் 169 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறை அமல்

நாமக்கல் மாவட்டத்தில் 169 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

Update: 2019-06-03 22:30 GMT
நாமக்கல், 

அரசு பள்ளி ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த முடிவு செய்து இருந்தது.

இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து பள்ளிகளிலும் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறந்த நிலையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த முறை அமலுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் 68 உயர்நிலைப்பள்ளிகள், 101 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 169 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 3,474 ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் 483 ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இதுவரை தினசரி பள்ளிகளில் உள்ள பதிவேடுகளில் கையெழுத்து போட்டு வந்தனர். ஆனால் நேற்று முதல் கைரேகை வைக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறைக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இனி தினசரி பள்ளிக்கு வருகை புரியும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும் ஆசிரியர்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும். இல்லை எனில் விடுமுறை எடுத்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஏற்கனவே இந்த முறை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்தகட்டமாக தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் இந்த முறை அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்