கச்சிராயப்பாளையம் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஏரிக்கரையில் கிடந்தன

கச்சிராயப்பாளையம் அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஏரிக்கரையில் கிடந்தன. அச்சம் காரணமாக மர்மநபர்கள் வீசிச் சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா.

Update: 2019-06-03 22:30 GMT
கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் அருகே மாதவச்சேரி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. கடந்த 11.4.2019 அன்று இந்த கோவிலின் கதவு பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் குத்துவிளக்குகள், பித்தளை செம்புகள், காமாட்சி விளக்குகள், மணி, தீபாராதனை தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும், சன்னதி முன்பு உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாதவச்சேரி-செம்படாக்குறிச்சி இடையே செல்லியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டையும், அதன் அருகில் கடப்பாரை ஒன்றும் கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, குத்து விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் 200 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் கடந்த மாதம் மாதவச்சேரி செல்லியம்மன் கோவிலில் கொள்ளைபோனது என்பது விசாரணையில் தெரியவந்தது.

அச்சம் காரணமாக வீசிச்சென்றார்களா?

இதையடுத்து போலீசார் சாக்கு மூட்டையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மர்மநபர்கள் அச்சம் காரணமாக செல்லியம்மன் கோவிலில் கொள்ளையடித்து சென்ற பொருட்களை ஏரிக்கரையில் வீசிச் சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடித்துச் சென்ற பொருட்களை ஒரு மாதத்துக்கு பிறகு கோவில் அருகே உள்ள ஏரிக்கரையில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்