சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக 17 கிராம மக்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 17 கிராம மக்கள், வாய் மற்றும் கண்களில் கருப்பு துணி கட்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.;

Update: 2019-06-03 22:15 GMT
சேலம், 

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்த சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரியும் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் நாழிக்கல்பட்டி, அயோத்தியாப்பட்டணம் விவசாயிகள் கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.

இதன் தொடர்ச்சியாக சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக நேற்று சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 17 கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

சேலம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியிலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:-

8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் மேல்முறையீடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே முதலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினோம். தற்போது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். எந்த காரணத்திற்காகவும் விவசாய நிலங்களை விட்டுத்தர மாட்டோம். தேர்தல் முடிந்து மத்திய அரசு புதிதாக பதவி ஏற்ற சில நாட்களிலேயே இந்த திட்டத்தை செயல்படுத்த நினைப்பது விவசாயிகளுக்கு எதிரானது ஆகும். அரசு இந்த திட்டத்தை கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதனிடையே அ.ம.மு.க. கட்சி நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினார்கள்.

்இதேபோல், சேலம் அருகே ராமலிங்கபுரத்தில் நேற்று காலை, விவசாயிகள், பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அரசுகள் மேல் முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆச்சாங்குட்டப்பட்டியில் விவசாயிகள் தங்கள் கைகளில் பதாகைகள் மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

8 வழிச்சாலை தொடர்பாக மேல்முறையீடு செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த 8 வழிச்சாலை வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், வீடுகள் மற்றும் கிணறுகளை இழக்க நேரிடுகிறது. சில விவசாயிகளின் நிலங்களை முற்றிலும் இழந்து விடுவோம். எங்கள் வீடு, விவசாய நிலங்களை இழந்து விட்டோம் என்ற பரிதவிப்பில் அடுத்து எங்கள் வாழ்வுக்கு வழி தெரியாமல் நிர்க்கதியாக நிற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதவிர சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பூலாவரி, அக்ரஹாரம், புஞ்சைக்காடு, ஆத்துக்காடு, சித்தனேரி, உத்தமசோழபுரம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச்சாலைக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வாயில் கருப்பு துணி கட்டியபடி பங்கேற்றனர். மேலும் அவர்கள் கூறும் போது, மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல்படுத்த முயன்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்றனர். மேலும் இந்த பகுதிகளில் நடப்பட்டு இருந்த நில அளவை கற்களை விவசாயிகள் ஆவேசமாக பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 கிராமங்களில் நடந்த இந்த போராட்டங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 17 கிராம மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது இப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்