மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க ரூ.3.46 லட்சம் கடன்உதவி
நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்கிட ரூ.3.46 லட்சம் கடன் உதவியை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 246 மனுக்களை கலெக் டரிடம் வழங்கினர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு விவசாயம் செய்யவும், கிரைண்டர் மற்றும் மிக்சி சர்வீஸ் சென்டர் நடத்தவும், ஜவுளி வியாபாரம், கறவை மாடு வளர்ப்பு, பெட்டிக்கடை நடத்துதல் உள்ளிட்ட தொழில்கள் தொடங்கிடவும் மானிய கடனாக ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 663-க்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) துரை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.