காவேரிப்பட்டணத்தில் சாலையின் நடுவில் தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

காவேரிப்பட்டணத்தில் சாலையின் நடுவில் தடுப்பு கம்பி (சென்டர் மீடியன்) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

Update: 2019-06-03 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

காவேரிப்பட்டணத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமாக கவேரிப்பட்டணம் நகரம் இருந்து வருகிறது. இந்த நகரை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் கிராமங்களில் இருந்து சொந்த வேலைக்காகவும், பணிக்கு செல்வோரும், வெளியூர் செல்வோரும் காவேரிப்பட்டணம் நகருக்கு வந்து தான் செல்கின்றனர். அதே போல் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காவேரிப்பட்டணம் நகருக்கு வந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு தினமும் பல்வேறு தரப்பட்டவர்களும் வந்து செல்லும் காவேரிப்பட்டணம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது. சாலையில் வாகனங்களில் செல்வோர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் செல்வதால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நகரின் சாலையின் குறுக்கே வேகத்தடை இல்லாததே ஆகும்.

நகரின் முக்கிய பகுதியான விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு, பாலக்கோடு சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். அத்துடன் நகரின் முக்கிய சாலையான சேலம் சாலையின் நடுவில் தடுப்பு கம்பிகள் அமைத்தால் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கிருஷ்ணகிரி குடிநீர் வண்டி ஓட்டுனர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் குந்தாரப்பள்ளி அருகில் இருந்து டேங்கர் பொருத்தப்பட்ட டிராக்டரில் கொண்டு சென்று தண்ணீர் வினியோகம் செய்கிறோம். ஆனால் அவ்வாறு சென்ற போது இதுவரை சுங்க கட்டணம் வசூல் செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சுங்க கட்டணம் வசூல் செய்கின்றனர். நாங்கள் பலமுறை கேட்டும், சுங்க அதிகாரிகள் கட்டணம் செலுத்தி தான் ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நாங்கள் குடிநீர் தட்டுப்பாடு உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன் பேரில் குடிநீரை குறைந்த விலையில் வினியோகித்து வருகிறோம். சுங்க கட்டணம் வசூலிப்பதால் நாங்கள், பொதுமக்களிடம் கட்டணத்தை சேர்த்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தண்ணீர் ஏற்றி வரும் டேங்கர் டிராக்டர்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்