மராட்டிய சட்டசபை தேர்தல் நெருங்குகிறது பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டி மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தகவல்
மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 135 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா தலைமையிலான அரசை கூட்டணி கட்சியான சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதும் தனது நிலையை மாற்றிக்கொண்ட சிவசேனா, பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணியை அமைத்தது.
இந்த கூட்டணிக்கு கைமேல் பலனாய் பெரும் வெற்றியை வாக்காளர்கள் அளித்தனர். 48 தொகுதிகளை கொண்ட மராட்டிய நாடாளுமன்றத்தில் 41 இடங்களை இக்கூட்டணி கட்சிகள் கைப்பற்றி பெரும் வெற்றியை பதிவு செய்தது.
இதன்படி 25 இடங்களில் போட்டியிட்ட பா.ஜனதா 23 இடங்களையும், 23 இடங்களில் போட்டியிட்டு சிவசேனா 18 இடங்களையும் கைப்பற்றியது.
இந்தநிலையில் மூத்த பா.ஜனதா தலைவரும், வருவாய்த்துறை மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பா.ஜனதா, சிவசேனா கூட்டணி மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தொடருமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
கூடுதலாக 5 இடங்கள்
மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சட்டமன்ற தேர்தலை கூட்டணியாக சந்திக்கும் என கூறியுள்ளனர். எங்கள் கட்சி ஒருபோதும் கூறிய வார்த்தைகளில் இருந்து பின்வாங்கியது கிடையாது.
மராட்டியத்தில் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தலா 135 இடங்களில் போட்டியிட உள்ளன. மீதமுள்ள 18 இடங்கள் இதர சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
தற்போது எங்கள் (பா.ஜனதா) வசம் 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 8 சுயேச்சைகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆகையால் எங்களது தற்போதைய பலத்தை விட கூடுதலாக 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறோம்.
சிவசேனாவிடம் 63 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
சாம்னா விமர்சனம் வேண்டாம்
இந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மக்களின் இயல்பான தேர்வாக இருப்பார். அவர் சிவசேனா உடனான உறவையும் சிறப்பாக கையாள்கிறார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயுடன் சிறந்த சமநிலையுடன் செயல்படுகிறார். சிவசேனா கட்சி பா.ஜனதா தலைமையிலான ஆட்சியின் மீதான விமர்சனங்களை வெளிப்படையாக சாம்னா (சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை) வாயிலாக மக்களிடம் எடுத்துவைக்கக்கூடாது. இதை நேரடியாக கட்சிக்குள்ளேயே வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய சட்டசபைக்கு வருகிற அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் மீண்டும் மராட்டியத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க உள்ளது.