மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பாடுபடுவோம் மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பாடுபடுவோம் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
உப்பள்ளி,
மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க இணைந்து பாடுபடுவோம் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறினார்.
இணைந்து பாடுபடுவோம்
மத்திய நாடாளுமன்ற விவகாரம், கனிம சுரங்கம், நிலக்கரி சுரங்கத்துறை மந்திரியாக பிரகலாத்ஜோஷி நியமிக்கப்பட்டார். மந்திரி பதவி ஏற்ற பிறகு அவர் முதல் முறையாக நேற்று உப்பள்ளிக்கு வந்தார். உப்பள்ளி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும். இந்த பிரச்சினையை தீர்க்க இணைந்து பாடுபடுவோம். இது தொடர்பாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். விவசாயிகளுக்கு தேவையான பயனை ஏற்படுத்தி கொடுப்போம்.
திறம்பட நிர்வகிப்பேன்
கொய்னா அணையில் இருந்து கர்நாடகத்தின் கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதாக மராட்டிய மாநில அரசு கூறியது. அது குறித்து அந்த மாநில முதல்-மந்திரியுடன் பேசுவேன். இதுபற்றி நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
என்னை வெற்றி பெற வைத்த தார்வார் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி எனக்கு வழங்கியுள்ள பொறுப்பை திறம்பட நிர்வகிப்பேன். தார்வார், உப்பள்ளி நகரங்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன்.
ஒத்துழைப்பு
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து, சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வேன்.
இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினாா்.