தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் பணம் திருட்டு
தூத்துக்குடியில் துறைமுக ஊழியர் வீட்டில் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டை சேர்ந்தவர் செல்லப்பா. இவருடைய மகன் ராஜ்(வயது 46). தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்பத்தினர் குறுக்குச்சாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ராஜ் நேற்று முன்தினம் இரவு துறைமுகத்துக்கு பணிக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்த போது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகளை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று தூத்துக்குடி கதிர்வேல்நகரில் இறை இரக்கத்தின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பணியாளர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் ஆலய பணியாளர் சேகர் ஆலயத்தை திறக்க வந்த போது, ஆலயத்தின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.