டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், லாரி மீது மோதல்: மராட்டியத்தை சேர்ந்த 7 பேர் சாவு கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது சோகம்
பெலகாவி அருகே சுற்றுலா சென்றபோது டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெலகாவி,
பெலகாவி அருகே சுற்றுலா சென்றபோது டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மராட்டியத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக இறந்தனர். கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது அவர்களுக்கு இந்த சோக சம்பவம் நேர்ந்துள்ளது.
டயர் வெடித்ததால் லாரி மீது மோதிய கார்
பெலகாவி மாவட்டம் மாலமாருதி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஸ்ரீநகரில் நேற்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலை தடுப்பு சுவரை தாண்டி சாலையின் மறுபுறத்துக்கு சென்று எதிரே வந்த லாரி மீது மோதி கவிழ்ந்தது.
இதனால் காரில் பயணித்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்தவுடன் மாலமாருதி மற்றும் பெலகாவி வடக்கு போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று அந்தப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
7 பேர் சாவு
அப்போது காரில் பயணித்த 5 பேர் படுகாயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுவது தெரிந்தது. இதையடுத்து உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இறந்த 7 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் நந்து பவார், மகேஷ் சவுரி, அமுல் நாவி, சுரேஷ் கானீரி, அமுல் சவுரி ஆகியோரும், ஆஸ்பத்திரியில் வைத்து கோபிநாத், ரவீந்திரா ஆகியோரும் இறந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள தேவகிரியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. அத்துடன் அவர்கள் கோலாப்பூரில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றபோது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெலகாவி வடக்கு போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.