நெல்லை அருகே பயங்கரம் விவசாயி வெட்டிக்கொலை

நெல்லை அருகே விவசாயி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-02 22:45 GMT
நாங்குநேரி, 

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45), விவசாயி. இவர் ஊருக்கு அருகே பூலாங்குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சேகர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. உடனே உறவினர்கள் அவரை தேடி தோட்டத்திற்கு சென்றனர். அங்கு தோட்டத்தில் உள்ள அறையில் சேகர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேகருக்கும், அதே ஊரை சேர்ந்த அவருடைய உறவினர்கள் சிலருக்கும் சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் தோட்டத்திற்கு தனியாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு சேகர் சென்றதை அறிந்த அவர்கள் அங்கு சென்று தோட்டத்தில் மறைந்து இருந்துள்ளனர். தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு அங்குள்ள ஒரு அறையில் சேகர் படுத்து தூங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த அவர்கள் சேகரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்