அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே வழிபாடு நடத்த முயற்சி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேச்சு

அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு செய்யும் முயற்சி செய்து வருகிறோம் என்று பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.

Update: 2019-06-02 23:00 GMT
திருப்பூர், 

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் அருளாட்சி ஏற்பு வழிபாடு விழா திருப்பூர் கணியாம்பூண்டியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவின் தொடக்கமாக தவம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் கலந்து கொண்டு தவம் நிகழ்ச்சியை நடத்தினார்.

வனம் இந்தியா அமைப்பின் செயலாளர் சுந்தரராஜ், வரவேற்று பேசினார். தொடர்ந்து கோவில் தலங்களும், தல தாவரங்களும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதிமாணிக்கம் புத்தகத்தை வெளியிட உலகசமுதாய சேவா சங்கத்தின் துணை தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.

இதுபோல ‘பேரூர் ஆதீனம் ஓர் அறிமுகம்’ குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை ஸ்ரீகரிய காளியம்மன் மஹால் நிர்வாக அறங்காவலர் நடராஜன் வெளியிட, உலக சமுதாய சேவா சங்கத்தின் துணை தலைவர் கே.ஆர்.நாகராஜன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தலைமை தாங்கினார்.

சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் வாழ்த்தி பேசினார். சாந்தலிங்கர் மருத்துவமனை அறக்கட்டளையின் அறங்காவலர் பாலசுப்பிர மணியம் கலந்து கொண்டு பேரூர் மடத்தின் எதிர்கால திட்ட விளக்கவுரை குறித்து பேசினார். விழாவில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமுதாயத்தில் பல குறிக்கோள்களை அடைய வேண்டிய கட்டாயத்திற்குள் உள்ளோம். கோவில்கள் நமது வாழ்வுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது. அவை வாழ்விற்கு வளம் சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழிலேயே வழிபாடு நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் இறைவன் முன் சமம் என்றும், எல்லோரும் இறைவனை அடைய முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. மனிதன் மட்டுமின்றி உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் இறைவன் சமமாகவே பார்க்கிறார். மொழியிலும் உயர்ந்த மொழி, தாழ்ந்த மொழி என்பது இல்லை.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. இதில் பல கோவில்களில் சீரமைப்பு பணிகள் கூட செய்யப்படாமல் இருக்கிறது. இவற்றை செய்ய முன்வர வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சமயதொண்டு, வழிபாடு, அகவழிபாடு, மெய்யுணர்வு உள்ளிட்ட நெறிகளை கொண்டு சேர்க்க வேண்டும். கல்வியையும் அடுத்த தலைமுறைக்கு தேவையான அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆன்மிகம் பல படிகளை கடந்தே முன்னேற வேண்டியுள்ளது. அனைவரும் ஆன்மிக பணிக்காக உங்களை அர்ப்பணியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விழாவின் தொடக்க நிகழ்வாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைக்குழுக்கள் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைக்குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், தஞ்சை தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்