மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு 12 லட்சம் விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று வழங்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 12 லட்சம் விலையில்லா பாடப்புத்தகங்கள் இன்று(திங்கட்கிழமை) வழங்கப்பட உள்ளது.

Update: 2019-06-02 22:45 GMT
கடலூர், 

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது.

வழக்கமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே மையங்களில் இருந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் அந்தந்த பள்ளிகளில் விலையில்லா பாடப்புத்தகங்களும், நோட்டுகளும் இன்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வடலூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் 2019-20-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 8 லட்சத்து 92 ஆயிரத்து 651 பாடப்புத்தகங்கள், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 3 லட்சத்து 14 ஆயிரத்து 745 விலையில்லா பாடப்புத்தகங்கள் என மொத்தம் 12 லட்சத்து 7 ஆயிரத்து 396 விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அதேபோல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 9 லட்சத்து 83 ஆயிரத்து 458 நோட்டு புத்தகங்களும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 9 லட்சத்து 20 ஆயிரத்து 151 நோட்டு புத்தகங்களும் என மொத்தம் 19 லட்சத்து 3 ஆயிரத்து 609 நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்