திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அரசு பள்ளியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை கண்டித்து போராட்டம்

திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அரசு பள்ளியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை கண்டித்து வருகிற 7-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய இளைஞர்-மாணவர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-06-02 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் - மாணவர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இளைஞர் மன்ற மாவட்டசெயலாளர் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசு பள்ளியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மழலையர் வகுப்புகள்

அரசு தொடக்க பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் அரசு கல்லூரிகளை புதிதாக தொடங்க வேண்டும்.

போராட்டம்

அரசு கல்லூரிகளில் புதிய பாட பிரிவுகளை தொடங்கி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகப்படுத்திட வேண்டும். எஸ்.சி., பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை தடையின்றி வழங்க வேண்டும். நியாயமான கோரிக்கையினை முன்வைத்து போராடிய ஆசிரியர்்களை பழிவாங்கும் விதமாக பதவி உயர்வு கிடையாது என்னும் அரசின் முடிவினை கைவிட வேண்டும். அரசு மாணவர், மாணவிகளின் விடுதிகளை மேம்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் முருகேசு, மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், இளைஞர்-மாணவர் மன்ற நிர்வாகிகள் சரவணன், நல்லசுகம், சரவணன், பிச்சமுத்து, கார்த்தி, சேக்தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்