திருச்சியில் தனியார் நிறுவனத்தில் ஆசிட் டேங்க் வெடித்ததால் பரபரப்பு

திருச்சியில் தனியார் நிறுவனத்தில் ஆசிட் டேங்க் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-02 23:00 GMT
திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவில் தனியார் ஆசிட் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் குடிநீர் தொட்டிக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டேங்கை போல ஆசிட் மற்றும் கெமிக்கல்கள் வைப்பதற்கு டேங்க் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிட் கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்த கூடியதாகும்.

இந்த நிலையில் நேற்று மதியம் அந்த நிறுவனத்தின் வைக்கப்பட்டிருந்த ஆசிட் டேங்குகளில் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அதில் இருந்து நெடி அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பொதுமக்கள் சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டது நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் டேங்கில் இருந்து வெளியேறிய ஆசிட்டை அப்புறப்படுத்த முயன்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் லியோ ஜோசப் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து டேங்கில் இருந்து வெளியேறிய ஆசிட் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மொத்தம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் வெடித்ததில் 2 ஆயிரம் லிட்டர் வெளியேறி நிறுவன வளாகத்தில் கிடந்தது. அதன் நெடியானது அந்த பகுதி முழுவதும் இருந்தது. டேங்கில் இருந்து வெளியேறிய ஆசிட்டை தண்ணீரை பீய்ச்சி சுத்தப்படுத்தியதன் மூலம் ஓரளவு சகஜ நிலை திரும்பியது. தனியார் நிறுவனத்தில் ஆசிட் டேங்க் வெடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்