நிலக்கோட்டையில் செயல்படும் வணிகவரி அலுவலகத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றினால் போராட்டம் வியாபாரிகள் அறிவிப்பு

நிலக்கோட்டை செயல்படும் வணிகவரி அலுவலகத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றினால் போராட்டம் நடத்துவோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

Update: 2019-06-02 22:45 GMT

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே வாடகை கட்டிடத்தில் வணிகவரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களுக்காக செலுத்த வேண்டிய வணிகவரி தொடர்பான ஆவணங்களை இந்த அலுவலகத்தில் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான கட்டிடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த வியாபாரிகள், வர்த்தகர்கள் சங்கத்தினர், வணிகவரி அலுவலகம் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி இடமாற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை வர்த்தகர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகரிடம் புகார் தெரிவித்தோம். அவர் கலெக்டர் டி.ஜி.வினயிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வணிகவரி அலுவலகம் தொடர்ந்து நிலக்கோட்டையில் தான் செயல்பட வேண்டும்.

மேலும் நிலக்கோட்டையிலேயே அரசு சார்பில் கட்டிடம் அமைத்து அதில் வணிகவரி அலுவலகத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை நிலக்கோட்டையில் செயல்படும் வணிகவரி அலுவலகத்தை திண்டுக்கல்லுக்கு மாற்றினால் வியாபாரிகள் அனைவரையும் திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

மேலும் செய்திகள்