ஓய்வூதியம் பெறுபவர்கள் 28–ந்தேதிக்குள் ஆஜராகி வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்; கலெக்டர் தகவல்

ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற 28–ந்தேதிக்குள் கருவூல அலுவலகத்தில் ஆஜராகி வாழ்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Update: 2019-06-02 23:00 GMT

திண்டுக்கல்,

தமிழக அரசு சார்ந்த அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அந்தந்த மாவட்ட மற்றும் சார் கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதத்துக்குள் கருவூல அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். நேரில் ஆஜராக இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வாழ்வு சான்றிதழ் பெற்று கருவூல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாழ்வு சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஓய்வூதியம் பெறுபவர்களின் வசதிக்காக ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் கருவூல அலுவலகங்களுக்கு செல்லாமலேயே www.jeevanpramaan.gov.in என்ற இணையதளம் மூலம் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

அரசு இ–சேவை மையங்களில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகி சான்றிதழ் சமர்ப்பிக்க விரும்புபவர்கள் ஓய்வூதிய புத்தகம், வருமானவரி கணக்கு எண், வங்கி சேமிப்பு கணக்கு விவரங்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கருவூல அலுவலகங்களுக்கு கொண்டு வந்து அதிகாரிகளிடம் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

நேரில் வர இயலாதவர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், வங்கி சேமிப்பு கணக்கு விவரங்கள், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வாழ்வு சான்றிதழ் படிவத்தை பூர்த்தி செய்து கருவூல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஓய்வூதியர்கள் வெளிநாட்டில் வசித்தால் இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாழ்வு சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சார் கருவூல அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலகத்தில் வருகிற 28–ந்தேதிக்குள் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்