சித்தராமையாவுடன் குமாரசாமி திடீர் சந்திப்பு 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசனை
பெங்களூருவில் சித்தராமையாவுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் சித்தராமையாவுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
சித்தராமையாவுடன் குமாரசாமி சந்திப்பு
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்கவும் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டுக்கு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மாலையில் சென்றார்.
அப்போது அவருடன் சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஆர்.சங்கரும் உடன் சென்றிருந்தார். பின்னர் சித்தராமையாவுடன், முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். 2 பேரும் 45 நிமிடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 2 பேரும் ஆலோசித்தனர்.
2 பேருக்கு மந்திரி பதவி
குறிப்பாக சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர், நாகேசுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து சித்தராமையாவுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதாவது கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்க முயன்றால், அவர்களுக்கு சுயேச்சைகள் ஆதரவு அளிக்கலாம் என்பதால், அவர்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையாவிடம் குமாரசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மந்திரிசபை மாற்றியமைப்பதா?, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சித்தராமையாவும், குமாரசாமியும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.