சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு ரமேஷ் ஜார்கிகோளிக்கும் பதவி வழங்க குமாரசாமி தீவிர ஆலோசனை

கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-01 23:00 GMT
பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை முன்னெடுத்து செல்ல சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரமேஷ் ஜார்கிகோளிக்கும் பதவி வழங்குவது பற்றி குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மந்திரி பதவியில் இருந்து நீக்கியதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான ரமேஷ் ஜார்கிகோளி அதிருப்தியில் இருந்து வருகிறார். இதுபோல, மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே ஆபரேஷன் தாமரை மூலம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க 2 முறை நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றதால் மீண்டும் ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சிப்பார்கள் என்று கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.

2 எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி

ஆனால் மந்திரிசபையில் காலியாக உள்ள 3 இடங்களை மட்டும் நிரப்புவதா அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா என்ற குழப்பம் கூட்டணி தலைவர்களுக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபையை மாற்றி அமைக்க வேண்டாம் என்றும், காலியாக உள்ள இடங்களை மட்டும் நிரப்பும்படி குமாரசாமியிடம் ராகுல்காந்தி கூறியதாக தெரிகிறது. மந்திரிசபையை மாற்றி அமைக்கும் முடிவை தள்ளி வைக்கலாம் என்றும் ராகுல்காந்தி கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு 2 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் உள்ளது. காங்கிரசில் காலியாக உள்ள 2 இடங்களையும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஆர்.சங்கர் மற்றும் நாேகஷ் ஆகியோருக்கு வழங்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கத்தை வருகிற 6-ந் தேதி அல்லது 7-ந் தேதி நடத்த முதல்-மந்திரி குமாரசாமி தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரமேஷ் ஜார்கிகோளிக்கு பதவி

காங்கிரசில் 10-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் மந்திரி பதவி வழங்கினால், மற்றவர்கள் அதிருப்தியில் பா.ஜனதாவில் சேர வாய்ப்புள்ளதால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு மட்டும் தற்போது மந்திரி பதவி வழங்க கூட்டணி தலைவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

அதுபோல, ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அதுகுறித்து 4-ந் தேதிக்கு பின்பு காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்