தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் காற்றின் வேகம் அதிகரிக்கும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை (திங்கட்கிழமை) 5 மி.மீட்டர் அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), 4-ந் தேதியும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
இன்று 8 கி.மீட்டர் வேகத்திலும், நாளை மற்றும் 4-ந் தேதி 10 கி.மீட்டர் வேகத்திலும் காற்றும் வீசும். அதேபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு மேற்கு திசையில் இருந்தும் காற்று வீசும். மேலும் வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக இன்று மற்றும் நாளை 102.2 டிகிரியாகவும், 4-ந் தேதி 98.6 டிகிரியாகவும் இருக்கும். குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை ஆரம்பமாவதற்கான சூழல் காணப்படுகிறது. அது இந்த வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்த வரையில் பகல் வெப்பம் 104 டிகிரியாகவும், இரவு வெப்பம் 78.8 டிகிரியாகவும் நிலவும்.
இனி வரும் நாட்களில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று சற்று வேகமாக வீசக்கூடும். இதனால் வெப்ப அயற்சியும், வெப்ப அதிர்ச்சியும் குறைந்து, கோழிகளில் தீவன எடுப்பு சீராக இருக்கும். இருப்பினும் விவசாயிகள் இந்த மாதம் முழுவதும் கோடைகால மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். எனவே கோழிபண்ணைகளை சுற்றிலும் படுதா பயன்படுத்தி கோழிகளை பாதுகாக்கலாம்.
கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்குமாறும், தீவனத்தில் தாது உப்பு (எலக்ட்ரோலைட்) கலவையை உபயோகிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. நாட்டுக்கோழிகளில் சுவாச நோய்களின் தாக்கம் காணப்படுவதால் தகுந்த உயிர் பாதுகாப்பு முறைகளை நாட்டுக்கோழி வளர்ப்போர் கையாள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.