ஏரிகளை முறையாக பராமரிக்காததால் கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது; தூர்வார விவசாயிகள் கோரிக்கை

ஏரிகளை தூர்வாரி முறையாக பராமரிக்காததால் கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து போனது.

Update: 2019-06-01 22:45 GMT

பாகூர்,

புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து விளங்கி வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலை நம்பியே உள்ளனர்.

இந்த பகுதியில் 24 ஏரிகள் உள்ளன. பருவமழை காலத்தில் பெய்யும் மழையால் இந்த ஏரிகள் நிரம்பும். இங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் தேக்கி வைப்பதால் பாகூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை போதுமான அளவுக்கு பெய்யாமல் ஏமாற்றியது. இதன் காரணமாக மாநிலத்தின் 2–வது பெரிய ஏரியான பாகூர் ஏரி மற்றும் மணப்பட்டு, குடியிருப்புபாளையம், பரிக்கல்பட்டு, காட்டுக்குப்பம், கிருமாம்பாக்கம் பெரிய ஏரி உள்பட 12 ஏரிகள் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

ஒருசில ஏரிகளில் மிகக்குறைவாகவே தண்ணீர் உள்ளது. கோடை காலமான தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மணப்பட்டு, கடுவனூர், காட்டுக்குப்பம் உள்பட 6–க்கும் மேற்பட்ட ஏரிகள் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமல் உள்ளது. ஏரி கரைகள், மதகுகள் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளன. இதனால் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

பாகூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரும் பங்காரு வாய்க்கால், நத்தமேடு, சித்தேரி வாய்க்கால்களும் தூர்வாரப்படாமல் உள்ளது. ஏரிகளில் சரியான பராமரிப்பு இல்லாததால் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பருவமழை தொடங்குவதற்கு முன்பு அனைத்து ஏரிகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்