பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு; தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் தகவல்

பள்ளிக்கூடங்களிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் கூறியுள்ளார்.

Update: 2019-06-01 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை தொழிலாளர் துறை ஆணையரும், வேலைவாய்ப்பு இயக்குனருமான வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுவை அரசு தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகத்தில் 12–ம் வகுப்பு மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்வதில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் நலன்கருதியும், அவரவர் படித்த பள்ளிகளிலேயே ஆன்–லைன் மூலமாக கடந்த 2016 முதல் பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இந்த ஆண்டும் இந்த ஏற்பாடு புதுச்சேரி அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் பயன்பெறுமாறு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக எழுத்தர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

2018–19ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் தேதி முதல் 15 தினங்கள் வரை மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவு செய்யப்படும். பள்ளியிலும், வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதியப்படும் அந்த 15 தினங்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய தேதியே பதிவு மூப்பாக கொள்ளப்படும்.

மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு செல்லும்போது தங்களது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் வழங்கப்பட்ட சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதன் நகலை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்