விவசாயிகள் பயன்பாட்டிற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்படுகின்றன

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் செயல்பட உள்ளன என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-06-01 23:00 GMT
புதுக்கோட்டை,

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2018-19-ஐ முன்னிட்டு நெல் அறுவடை தொடங்கி உள்ளதால், விவசாயிகள் அதிகபட்ச அளவில் பயன்பெறும் வகையிலும், விலை வீழ்ச்சியின் பாதிப்பில் இருந்து காக்கும் வகையிலும், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

இதன்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆலங்குடி தாலுகாவில் நெடுவாசல், எஸ்.குளவாய்பட்டி, ஆலங்குடி ஆகிய இடங்களிலும், கந்தர்வகோட்டை தாலுகாவில் வீரடிப்பட்டி, தெத்துவாசல்பட்டி, குளத்துநாயகன்பட்டி ஆகிய இடங்களிலும், கறம்பக்குடி தாலுகாவில் வெள்ளாளவிடுதி, ரெகுநாதபுரம், ராங்கியன்விடுதி, பாப்பாபட்டி, மழையூர், புதுப்பட்டி, கலியரான்விடுதி ஆகிய இடங்களிலும், இலுப்பூர் தாலுகாவில் இலுப்பூரிலும், அறந்தாங்கி தாலுகாவில் ஏ.எஸ்.புரத்திலும் திறக்கப்பட உள்ளது.

இந்த கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் நாளை (திங்கட்கிழமை) முதல் செயல்படுகின்றன. எனவே, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லினை தங்கள் கிராமங்களுக்கு அருகே உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் விற்பனை செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்