காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,900 கனடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,900 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2019-06-01 22:15 GMT
பென்னாகரம், 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. இதனிடையே கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 30-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,700 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,900 கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.

தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் பரிசல்துறையில் இருந்து பாதுகாப்பு உடை அணிந்து ஐவர்பாணி வழியாக மணல் திட்டு வரை பரிசலில் சென்றனர். பின்னர் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலம், நடைபாதை, முதலை பண்ணை, மீன் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்